எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு


எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு
x

வேலகவுண்டம்பட்டி அருகே எண்ணெய் ஆலை மேலாளரை அரிவாளால் வெட்டிய பால்காரரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

ஆயில் மில் மேலாளர்

திருச்செங்கோடு அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாசண்ணன். இவரது மகன் பிரேம்குமார் (வயது 26). இவர் புள்ளாக்கவுண்டம்பட்டியில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த எண்ணெய் ஆலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளராக வேலகவுண்டம்பட்டி அருகே வடுகபாளையத்தை சேர்ந்த பால்காரர் ராஜேந்திரன் (42) உள்ளார். இதனால் இவர் ஆலையில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.

இந்தநிலையில் ராஜேந்திரன் பெயரில் ரூ.12 ஆயிரம் தவறுதலாக கடனாக சேர்த்து விட்டதாக ஆலையில் பணிபுரியும் ஒருவர் பிரேம்குமாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பிரேம்குமார், ராஜேந்திரனுக்கு போன் செய்து கூறியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ராஜேந்திரன், பிரேம்குமாரை தகாத வார்த்தையால் திட்டி வீட்டிற்கு வா பேசிக்கொள்ளலாம் என்றார்.

பால்காரர் கைது

இதையடுத்து பிரேம்குமார் பணி முடிந்து இரவு ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றார். அப்போதும் ராஜேந்திரன், பிரேம்குமாரை திட்டி அரிவாளால் அவரது மோட்டார் சைக்கிளின் டயர்களை வெட்டினார். அதை தடுக்க முயன்ற பிரேம்குமாரின் தலையிலும் வெட்டியுள்ளார். மேலும் மதுபோதையில் அருகில் இருந்த வைக்கோல் போருக்கும் தீ வைத்துள்ளார்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story