புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு; காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரிவாள் வெட்டு
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 58). விவசாயி. இவருடைய மகன் பவித்ரன் (27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் ஜெயமணி(32) என்பவருக்கும், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்திக் பவித்ரனிடம், ஜெயமணியை பற்றி விசாரித்ததாக தெரிகிறது. ஜெயமணி தன்னை பற்றி கார்த்திக், பவித்ரனிடம் தான் விசாரித்து இருக்க வேண்டும் என்று எண்ணி, ஜெயமணி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி இரவு 11 மணியளவில் முன்விரோதம் காரணமாக பவித்ரன் வீட்டிற்கு சென்று அவரை திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் பவித்ரன் பலத்த காயமடைந்தார்.
சாவு
இதை தடுக்க வந்த பாலசுப்பிரமணியனையும் கத்தியால் தாக்கியதில், தந்தை, மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவித்ரன் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ஜெயமணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பவித்ரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.