இறைச்சி கடை காசாளருக்கு அரிவாள் வெட்டு
இறைச்சி கடை காசாளருக்கு அரிவாள் வெட்டு
கோவை
கோவை போத்தனூர் கணேசபுரம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை தெப்பகுளத்தை சேர்ந்த கதிர்வேல்(21) என்பவர் இறைச்சி வெட்டும் ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் கறிக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததது. அப்போது கதிர்வேல் இறைச்சியை மெதுவாக வெட்டியதாக தெரிகிறது.
இதனை பார்த்த வேலாயுதம் வேகமாக வெட்டுமாறு கூறினார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் பேசியதோடு இறைச்சி வெட்டும் அரிவாளால் வேலாயுதத்தை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.