தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 22 Sep 2023 7:15 PM GMT (Updated: 22 Sep 2023 7:15 PM GMT)

கோவையில் கடையில் வைத்திருந்த காய்கறிகளை ஆடுகள் தின்றதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம்

கோவையில் கடையில் வைத்திருந்த காய்கறிகளை ஆடுகள் தின்றதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

கோவை நல்லாம்பாளையம் லட்சுமி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 51). தொழிலாளி. இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்க கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வ.உசி. நகரில் அருள் பிரின்ஸ் (30) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவராஜ் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது மளிகை கடை முன்பு வைத்திருந்த காய்கறிகளை ஆடுகள் தின்று உள்ளன. இதனால் அருள் பிரின்சுக்கும், தேவராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மளிகைக்கடைக்காரர் கைது

இந்தநிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தேவராஜ் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது, அந்த ஆடுகளை அருள் பிரின்ஸ் கற்களால் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அருள் பிரின்ஸ் தகாத வார்த்தைகளால் பேசி தேவராஜை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த தேவராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடை உரிமையாளர் அருள் பிரின்சை கைது செய்தனர்.


Related Tags :
Next Story