வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; மகள் உள்பட 4 பேரிடம் விசாரணை


வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; மகள் உள்பட 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2023 2:30 AM IST (Updated: 28 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பழைய இரும்பு வியாபாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேனி அருகே பழைய இரும்பு வியாபாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரமாரி அரிவாள் வெட்டு

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் வேணுகோபால பாண்டியன் (வயது 55). இவர் பழனிசெட்டிபட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உமாமகேஷ்வரி என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வேணுகோபால பாண்டியன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். ஆஞ்சநேயா நகர் தெருவில் வந்து கொண்டு இருந்த போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர், அந்த 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

4 பேரிடம் விசாரணை

தலை, முகம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வேணுகோபால பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வேணுகோபால பாண்டியனின் மகளையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த கொலை முயற்சிக்கு காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story