வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டீக்கடை
தூத்துக்குடி 3-வது மைல் சங்கர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2-வது மகன் உதயசங்கர் (வயது 26) என்பவர் டீக்கடையில் இருந்தாராம்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் டீக்கடையில் 2 வடை பார்சல் வாங்கினார்களாம். பின்னர் வடைக்கு சட்னி தருமாறு கேட்டு உள்ளனர். ஆனால் உதயசங்கர் பார்சல் வடைக்கு சட்னி கொடுப்பது இல்லை என்று கூறினாராம்.
அரிவாள் வெட்டு
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் உதயசங்கருடன் தகராறு செய்து உள்ளனர். பின்னர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் வெட்டியும், அந்த பகுதியில் கிடந்த கல்லாலும் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.