திருப்புவனத்தில் அரிவாள் பட்டறைகளின் வளர்ச்சிக்கு அரசு உதவுமா?
திருப்புவனத்தில் அரிவாள் பட்டறைகளின் வளர்ச்சிக்கு அரசு உதவுமா என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் அரிவாள் பட்டறைகளின் வளர்ச்சிக்கு அரசு உதவுமா என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
திருப்பாச்சேத்தி அரிவாள்
மண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரவுடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓடி வரும்போது இந்த அரிவாள் எல்லாம் எங்க செய்யுறாங்க என கேட்டால் எல்லோரும் கோரசாக சொல்வது திருப்பாச்சேத்தியில்தான்.
அந்த அளவுக்கு இந்த பகுதி அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேமஸ். திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் தயார் செய்யப்படும் அரிவாள்களை தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வாங்கிச்செல்கின்றனர்.
மதுரை, சிவகங்கை பகுதிகளை ஆட்சி செய்த பாண்டியர், மருது சகோதரர்களின் படைகளுக்கு திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதிகளில் தான் ஆயுதங்கள் செய்து கொடுக்கும் பட்டறைகள் இருந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதும் இந்த பகுதிகளில் பட்டறைகள் இயங்கி வருகின்றன.
தற்போது இங்கு விவசாய பணிகளுக்கு பயன்படும் மண்வெட்டி, கடப்பாரை, கோடாரி, பன்னரிவாள், வீச்சு அரிவாள், பாளையரிவாள், கதிர் அரிவாள், வெட்டரிவாள், கொத்தரிவாள், இறைச்சி வெட்டும் கத்திகள், உயரமான மரங்களில் உள்ள இலை, காய் பறிக்கும் தொரட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, கருப்பணசாமி, முனியாண்டி கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறினால் உயரமான அரிவாள் வாங்கி வைப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்ப அரிவாள் பட்டறையில் 15 அடி, 18 அடி, 21 அடி என ராட்சத அரிவாள்கள் 150 கிலோ முதல் 300 கிலோ எடை வரை செய்து கொடுக்கப்படுகிறது.
தொழிலை பெருக்க நடவடிக்கை
இதுபற்றி பட்டறை தொழிலாளர் குமார் கூறியதாவது:-
இங்கு விவசாய பணிக்கு தேவைப்படும் அரிவாள் வகைகளை மட்டும் தான் தயாரிக்கிறோம். அரிவாள்களை வாங்க வருபவர்களிடம் ஆதார் கார்டு நகல், செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு விற்பனை செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதை பின்பற்றி விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, வெளியூரில் இருந்து வந்து அரிவாள் கேட்டால் உள்ளூர்காரர் உறுதியளித்தால்தான் அரிவாள் விலைக்கு கொடுப்போம். திருப்புவனத்தில் சுமார் 20 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு உரிய ஊக்கத்தை அரசு அளித்தால் மட்டுமே எங்களால் முன்னேற முடியும். அதாவது எங்கள் தொழிலை பெருக்க வங்கிக்கடன் வழங்க வேண்டும். அதன் மூலம் மெஷின்கள் வாங்கி அரிவாள் உற்பத்தியை பெருக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருட்களின் தரம்
மற்றொரு பட்டறையை நடத்தி வரும் சந்திரசேகரன் கூறியதாவது:-
அரிவாள் தயாரிப்பு எங்களது குலத்தொழில். தற்சமயம் படித்துவிட்டு பல்வேறு வேலைகளுக்கு எங்கள் குடும்பத்து இளைஞர்கள் சென்று விடுகின்றனர். இதனால், குலத்தொழிலை பார்க்க இந்த தலைமுறையினர் யாரும் வருவதில்லை. கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. எங்களது பட்டறைகளில் உருக்கு அரிவாள் மிக நல்ல முறையில் தரமாக தயாரித்து விற்பனை செய்கிறோம்.
நமது தயாரிப்பான உருக்கு அரிவாள்கள் ரூ.600-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை அதிகம் என்று கூறும் பலர், இரும்பில் செய்யப்பட்ட அரிவாள்களை ஆன்லைன் மூலம் குறைந்தவிலைக்கு வாங்குகின்றனர். எங்கள் தயாரிப்புடன் ஒப்பிடும்போது அவை தரமானவையாக இருக்காது. எங்களது தொழிலை விருத்தி செய்ய அரசும், அதிகாரிகளும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.