அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


அழிந்து வரும் கடல் பசு இனங்களை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

தஞ்சை கடல் பகுதியில் அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சை கடல் பகுதியில் அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடல் பசு

கடல் பசுக்கள் பாலூட்டி வகையைச்சேர்ந்த உயிரினமாகும். நன்கு வளர்ந்த கடல் பசு 10 அடி நீளமும், 250 முதல் 300 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் குட்டிகள் 3 அடி நீளமும், 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும்.

6 வயது முதல் 17 வயது வரை இனப்பெருக்கம் செய்யும் காலம். இதன் தலை மற்றும் முக அமைப்பு வட்ட வடிவிலும் தாடை கீழ் நோக்கியும் இருக்கும். லேசான ரோமங்களுடன் மென்மையான தோல் அமைப்புகொண்டது கடல் பசு.

தமிழக பகுதிகளில்...

கடலுக்கு அடியில் உள்ள நிலத்தடியில் வளரும் கடல் புற்களை உணவாக உட்கொள்ளும் கடல் பசுக்கள் அரிய வகை உயிரினங்களாகும். உலக அளவில் இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்பெருங்கடல் உள்ள 30 நாடுகளில் இந்த கடல் பசுக்கள் வசிக்கின்றன.

இந்தியாவில் கட்ச் வளைகுடா பகுதியான குஜராத் மற்றும் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியான தமிழ்நாடு கடல் பகுதி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக்கடல் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன. கடல் பசுக்கள் ஆழ்கடல் பகுதி மற்றும் வலிமையான அலைகள் உள்ள கடல் பகுதியில் வாழாது.

ஆழம் குறைந்த பகுதி

ஆழம் குறைந்து அலைகள் இல்லாத பகுதிகளில் தான் வாழும். காரணம் இந்த பகுதிகளில் தான் கடல் புற்கள் நன்கு செழித்து வளரும். இந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதி ஆழம் குறைந்தும் அலைகள் அதிகஅளவில் இல்லாமலும் காணப்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் கடல் பசுக்கள் வாழ்கின்றன.

சென்னை முதல் கோடியக்கரைவரை அலைகள் சீற்றம் அதிகம் உள்ளதாலும் கடலின் ஆழம் அதிகம் உள்ளதாலும் இந்தப்பகுதியில் கடல் பசுக்கள் வாழாது.

அழிந்து வரும் நிலையில்...

இந்த நிலையில் அரிய கடல் வாழ் உயிரினங்களான டால்பின், திமிங்கலம் ஆகிவற்றிற்கு ஒப்பாக கருதப்படும் கடல் பசுக்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது, கடல் வாழ் உயிரின ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாகவே இதன் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடல் பசுக்களை வேட்டையாடுவதை தடுக்க அரசு கடுமையான சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையிலும் கடல் பசுக்களை பாதுகாக்க முடியவில்லை. இதற்கு காரணம் அரசால் விதிக்கப்பட்ட மீன்பிடி விதிகளை பின்பற்றாத ஒரு சில மீனவர்கள் அதாவது தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறையான இரட்டை மடி, ரேஷ்மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடலின் தரைப்பகுதிகளில் உள்ள கடல் புற்கள் அழிந்துவிடுகிறது. இதனால் கடல் பசுக்கள் உண்ண உணவில்லாததால் வேறு கடல் பகுதியை நாடிச்செல்ல வேண்டி உள்ளது.

ரசாயனக்கழிவுகள்

கடற்கரைப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் கலப்பது, உடைந்த கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு போன்ற கடினமான பொருட்களை கடலில் போடுவதால் கடலுக்கு அடியில் இரை தேடிச்செல்லும் கடல் பசுக்கள் மீது பட்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்து விடுவதும் நடக்கிறது.

உலக அளவில் போற்றப்படும் அரிய கடல் வாழ் விலங்கான கடல் பசுக்கள் தமிழ்நாட்டு கடல் பகுதியில் அதுவும் தஞ்சை கடல் பகுதியில் வாழ்வது சிறப்பம்சமாகும். இந்த நிலையில் கடல் பசுக்களை பாதுகாக்க முடியவில்லையே என்ற வேதனை அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது.

விழிப்புணர்வு

எனவே கடல் பசுக்களை பாதுகாக்க தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் வெளிமாவட்ட அதிவேக விசைப்படகுகளை தடுத்து நிறுத்துவதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் கடல் பசுக்களை பாதுகாக்க அனைத்துப்பகுதி மீனவர்களிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story