கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு ,கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பௌர்ணமி முடியும் தருவாயில் அமாவாசை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் இன்று காலை11மணி முதல்"திடீர்"என்று பயங்கர சூறாவளி காற்று வீசியது.
இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அச்சப்பட்டனர். இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுற்றுலா போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்க தடைவிதித்தனர். ஏற்கனவே கடலில் ஆனந்த குளியல் போட்டுக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினார்.
இதேபோல கோவளம், சின்னமுட்டம்,ஆரோக்கியபுரம்,வாவத்துறை, கீழமணக்குடி,மணக்குடி,பள்ளம்,சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜகமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.