ஈரோட்டில், வாடகை செலுத்தாததால் ஜவுளி குடோன் பூட்டி 'சீல்' வைப்பு- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில், வாடகை செலுத்தாததால் ஜவுளி குடோனை பூட்டி ‘சீல்' வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில், வாடகை செலுத்தாததால் ஜவுளி குடோனை பூட்டி 'சீல்' வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாடகை பாக்கி
ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. வாடகை செலுத்தாத கடைகள் மீது இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் அருகே அனுமந்த ராயன் கோவில் வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 9 கடைகள் உள்ளன. இந்த கடைகளை நடத்தி வந்தவர்கள் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலமுறை கேட்டும் எந்தவித பதிலும் இல்லை. இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஏற்கனவே 7 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.
பூட்டி 'சீல்' வைப்பு
இந்த நிலையில் நேற்று காலை அனுமந்தராயன் வீதியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஜவுளி குடோன் வைத்து நடத்தி வந்தவர் முறையாக வாடகை செலுத்தாததால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அன்னக்கொடி தலைமையில் அதிகாரிகள் ஜவுளி குடோனை பூட்டி 'சீல்' வைத்தனர்.
அப்போது செயல் அலுவலர் அருள்குமார் கயல்விழி, ஆய்வாளர் தினேஷ்குமார், ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் அழகர் ராஜன், சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.