அனுமதியின்றி கட்டிய வணிக வளாக கட்டிடத்துக்கு 'சீல்'


அனுமதியின்றி கட்டிய வணிக வளாக கட்டிடத்துக்கு சீல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

அனுமதியின்றி கட்டிய வணிக வளாக கட்டிடத்துக்கு ‘சீல்’

கோயம்புத்தூர்

டவுன்ஹால்

கோவையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்' வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அனுமதியின்றி வணிக வளாகம்

கோவை மாநகராட்சி அனுமதியின்றி பேனர் வைப்பது, சுவர் விளம்பரங்கள் செய்வது, கண்ட இடங்களில் குப்பை கொட்டுவது உள்பட பல்வேறு விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமலும் விதி மீறலுடன் கட்டப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் கோவை ரங்கே கவுடர் பகுதியில் உள்ள கட்டிட உரிமையாளர் பிரகாஷ் குமாரி என்பவர் முதலில் வீடு கட்ட அனுமதி பெற்று, வீட்டை கட்டாமல் 11 ஆயிரத்து 662 சதுர அடியில் வணிக வளாகம் கட்டியுள்ளார். இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தைக் கொண்டதாகும். வணிக வளாகம் கட்டும்போதே அதிகாரிகள் ஆய்வு செய்து நோட்டீசு வழங்கி உள்ளனர். அதையும் மீறி பிரகாஷ் குமாரி கட்டிடம் கட்டி உள்ளார். இது குறித்து தேசிய நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகமும் விசாரணை நடத்தியது. அதில் விதி மீறல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

'சீல்' வைப்பு

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் உதவி நகரமைப்பு அதிகாரி பாபு மேற்பார்வையில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் அந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story