கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு 'சீல்'


கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு சீல்
x

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவார்கள். இக்கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இக்கோவிலில் உண்டியல் வசூலில் முறைகோடு நடப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் சரக ஆய்வாளர் வடிவுக்கரசி மற்றும் திருச்செங்கோடு சரக ஆய்வாளர் நவீன் ராஜா ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலையத்துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியலை துணியால் மூடி கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே முத்திரை இடப்படாத துறை அனுமதி இன்றி 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அந்த 4 உண்டியல்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story