வீடு உள்பட 5 கடைகளுக்கு சீல் வைப்பு
சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விவகாரத்தில் வீடு உள்பட 5 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விவகாரத்தில் வீடு உள்பட 5 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகையிலை விற்பனை
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாநகரில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், செவ்வாய்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 6 கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கடைகள் சீல் வைப்பு
இந்தநிலையில், செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை ஆட்டோ நிறுத்தம் அருகில் பழனியம்மாள் (வயது 55) என்பவரின் வீடு, கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த புகாரில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அவரது வீடு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல், அன்னதானப்பட்டி நரசிம்மன் ரோடு பகுதியில் கதிரேசனின் மளிகை கடை, எம்.கொல்லப்பட்டியில் இரும்பாலை மெயின்ரோட்டில் வெங்கடாசலம் (66) என்பவரின் பீடா கடையும், தளவாய்பட்டியில் வைரமணி (23) என்பவரின் பீடை கடையும் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி தலைமையில் சம்பந்தப்பட்ட போலீசார் இணைந்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர். சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு ஒரு வீடு உள்பட 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.