விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு 'சீல்'


விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு சீல்
x

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மாஸ்டர் பிளான்

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாகவும், அதிக வனப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது.

குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், ஓட்டல்கள் கட்டக்கூடாது, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த விதிகளை மீறி சிலர் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்களில் முறையாக கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, ஊட்டி நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

6 கட்டிடங்களு்கு 'சீல்'

இந்த நிலையில் ஊட்டியில் சிலர் விதிமுறைகளை மீறி தங்கும் விடுதிகள், வணிக நிறுவன கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தொடர்ந்து வந்தது.

இதன்பேரில், நகராட்சி திட்டமைப்பு அதிகாரி ஜெயவேல், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக எட்டின்ஸ் சாலையில் 3 கட்டிடங்கள், மெயின் பஜார் சாலையில் 2 கட்டிடங்கள், அப்பர் பஜாரில் 1 கட்டிடம் என 6 கட்டிடங்களுக்கு நேற்று 'சீல்' வைத்தனர். கடந்த வாரத்தில் 14 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story