உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த மருந்தகத்துக்கு சீல் வைப்பு
சுரண்டையில் உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த மருந்தகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சுரண்டை:
கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் மகன் ராமச்சந்திரன் (வயது 42). இவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கிராமத்தில் மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வந்தார். மேலும் இவர் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
இதையடுத்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவுப்படி வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைநம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், ஆலங்குளம் சரக மருத்துவ ஆய்வாளர் பவித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூலநாதர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உரிய அனுமதி இன்றி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து மருந்தகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.