மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டபோலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்தது.
மேட்டூர்
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 35). இவர் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் மேட்டூருக்கு வந்தார். பின்னர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த போது துரைமுருகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக போலீஸ்காரரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் இரவு 8 மணி வரை கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.