திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 30 April 2023 12:45 AM IST (Updated: 30 April 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மலையோர பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

மலையோர பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கோடை மழை

குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. தற்போது சில நாட்களாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினத்தை விட நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அருவி பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குளு குளு சீசன் நிலவுகிறது.

தற்போது பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்புக்கு படை எடுத்தனர். அவர்கள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்தனர். அருவி எதிரே உள்ள பூங்கா, அலங்கார நீரூற்று ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்தை சீர் செய்ய போதிய பணியாட்களை பேரூராட்சி நிர்வாகம் நியமிக்க வேண்டும் என்றும், கோடை காலம் முடியும் வரை கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் காலையிலும், மாலையிலும் பக்தர்கள் அதிக அளவில் வழிபட்டனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர். அவர்கள் பாலத்தில் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் தொட்டிப்பாலம் களை கட்டியது.

குழித்துறையில் 62.2 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதே போல மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ.வருமாறு:-

களியல்-4.6, கன்னிமார்-6.8, பெருஞ்சாணி-15.8, புத்தன்அணை-15, சுருளகோடு-7, தக்கலை-20, திற்பரப்பு-5.8, ஆரல்வாய்மொழி-14, கோழிப்போர்விளை-38.5, அடையாமடை-24, முள்ளங்கினாவிளை-22.4, முக்கடல்-8.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

இந்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 206 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 36.47 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.55 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.30 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் -19 அடியாகவும் உள்ளது.


Next Story