இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்பசு
இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல்பசு, ஆமை உள்ளிட்ட 3600 வகையான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் கடல் பசுவை பார்ப்பது என்பது மிகமிக அரிதான ஒன்றாகும். இந்த நிலையில் மண்டபம் காந்திநகர் தெற்கு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இந்த கடல் பசுவை மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டனர். அது சுமார் 5 அடி நீளத்திலும், 500 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. இந்த கடல் பசுவானது கடல்பகுதியில் நீந்தும்போது ஏதேனும் கப்பல் அல்லது பெரிய படகுகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகளில் அடிபட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இறந்து கரை ஒதுங்கி கிடந்த இந்த அரியவகை கடல் பசுவை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.