1,081 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக 1,081 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ந் தேதி தொடங்கப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக 1,081 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ந் தேதி தொடங்கப்படுகிறது. குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
கண்காணிப்புக்குழு
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகையை அதிகரிக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காலை உணவுத்திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. வட்டார அளவில் உதவி திட்ட அலுவலர்கள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொண்ட குழு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம்
வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. 251 ஊராட்சிகளில் 797 பள்ளிகள், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகள், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகள், திருப்பூர் மாநகராட்சியில் 120 பள்ளிகள் உள்பட மொத்தம் 1,081 பள்ளிகளில் 75 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். காலை உணவு தயாரிக்கும் சமையலறையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்து தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.