தனியார் நிறுவனத்தில் காவலாளி வெட்டிக்கொலை
திருவண்ணாமலையில் தனியார் நிறுவனத்தில் காவலாளி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் தனியார் நிறுவனத்தில் காவலாளி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் பயங்கரம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வகுமார் (வயது 35). இவர் திருவண்ணாமலை புறவழிச் சாலை அவலூர்பேட்டை ரோட்டில் இயங்கி வரும் தனியார் எம்சாண்ட் விற்பனை நிலையத்தில் இரவு நேர காவலாளியாகவும் சுமைதூக்கும் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அந்த நிறுவனத்தின் வாயிலில் செல்வகுமார் கட்டில் போட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
உடனே கொலையாளிகள் 2 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 பேரை பிடித்து விசாரணை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகள் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதன்மூலம் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் அடையாளம் கண்டனர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
கொலை செய்யப்பட்ட செல்வகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல்- வாங்கல் காரணமாக கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னர் தான் பிடிப்பட்ட நபர்கள் குறித்து விவரம் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அச்சம்
செல்வகுமார் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் கடந்த 25-ந் தேதி மெக்கானிக் கடையில் சிறுவன் ஒருவனை தாக்கிய 2 பேரை தட்டிக் கேட்ட பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் முருகன் என்பவர் வெட்டப்பட்டார்.
அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் சமீப நாட்களாக கஞ்சா போதையில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.