பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது பாதுகாப்பு குளறுபடி: நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் அண்ணாமலை மனு


பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது பாதுகாப்பு குளறுபடி: நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் அண்ணாமலை மனு
x

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் கவர்னரிடம் அண்ணாமலை மனு கொடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை நேற்று சந்தித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது, அவருக்கு பாதுகாப்பு குளறுபடிகள் செய்ததாகவும், ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் 2 மனுக்களை தனித்தனியாக கவர்னரிடம், அண்ணாமலை கொடுத்தார்.

அப்போது, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு குளறுபடி

கவர்னரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய மாநில அரசு தன்னுடைய பணியில் இருந்து தவறியிருக்கிறது என்பதை ஆதாரத்தின் அடிப்படையில் மனுவாக கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். பிரதமர் வந்தபோது, நேரு உள்விளையாட்டு அரங்கில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அப்போது பிரதமரின் பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்கவேண்டிய மாநில அரசு வைத்திருந்த நிறைய 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் வேலை செய்யவில்லை. குறிப்பாக கையில் வைத்திருக்கும் 'மெட்டல் டிடெக்டர்', 'டோர் மெட்டல் டிடெக்டர்' கருவிகள் பழுதடைந்து, பராமரிப்பு இல்லாததை பெயருக்காக போலீசார் சில இடங்களில் வைத்திருந்தார்கள்.

பிரதமரின் நிகழ்ச்சி முடிவடைந்ததும், மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சி மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. பிரதமரின் வருகையின்போது, அவருடைய பாதுகாப்பில் மாநில அரசு இவ்வளவு பெரிய குளறுபடியை செய்வதால், சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்?. எனவே இதற்கு உடனடியாக மாநில அரசு பொறுப்பு ஏற்று, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முறைகேடு

கோவில்கள் உள்பட மாநிலத்தில் முக்கியமான இடங்களில் இருக்கின்ற 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் சரியாக செயல்படுகிறதா? சுதந்திரமான தணிக்கை செய்வதற்கும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஒருபக்கம் கோவையில், மனிதவெடிகுண்டு தாக்குதல், கள்ளக்குறிச்சி கலவரம், 19 இடங்களுக்கும் மேல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மாநில உள்துறை தூங்கிக்கொண்டிருக்கிறது. வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் 'ஜல்ஜீவன்' என்பது மத்திய அரசின் கனவு திட்டம். தமிழகத்தில் மாநில அரசு மூலமாக 69 லட்சம் இணைப்புகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க.வினர் சென்று பார்க்கும்போது, ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதும், லஞ்சம், லாவண்யம் பெருகிவிட்டதும் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக இணைப்பே இல்லாமல் குழாய் மட்டும் பதித்திருக்கிறார்கள். இதேபோன்று பல இடங்களில் கோடிக்கணக்கில் மாநில அரசு ஊழல் செய்திருக்கிறது. இதையும் கவர்னரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவாக கொடுத்திருக்கிறோம். கவர்னர் இந்த விவகாரங்கள் தொடர்பாக தணிக்கை செய்து, அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசர சட்டம்

பின்னர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பிரதமர் வருகையின்போது 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் செயல்படவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

பதில்:- மத்திய அரசு தரப்பில், மாநில அரசுக்கு எழுத்துப்பூர்வமான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மாநில புலனாய்வு துறை எழுத்துப்பூர்வமாக போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் நகல் இருக்கிறது. உலகிலேயே அதிக அச்சுறுத்தல் இருக்கும் மனிதர் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி தான். எனவே அவர் வந்தபோது தமிழகம் சரியான பாதுகாப்பினை வழங்காதது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

கேள்வி:- தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு, கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லையே ஏன்?

பதில்:- கவர்னர் அவசர சட்டத்துக்கு அனுமதி கொடுத்த பிறகும், இத்தனை காலம் அந்த சட்டத்தை ஏன் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை? கவர்னரின் கையெழுத்தை வாங்கிவிட்டு, அரசாணை கூட தமிழக அரசு போடவில்லை. சட்டம் அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்து இருக்கிறதா? மத்திய-மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் சரியாக கையாள்கிறார்களா? என்பதை பார்க்கவேண்டிய கடமை கவர்னருக்கு இருக்கிறது.

பாதுகாப்பு குறைபாடு

கேள்வி:- பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு காரணம் யார்?

பதில்:- தமிழகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சி சார்ந்து பணியாற்றுகிறார்கள். புலனாய்வு துறைக்கு, முதல்-அமைச்சரின் பிம்பத்தில் தான் கவனம் இருக்கிறதே தவிர, சாதாரண மக்களை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு, பயங்கரவாத தாக்குதல் என்று இன்னும் சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள்.

கேள்வி:- கவர்னர் பதவி காலாவதியாகிவிடும் என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறாரே...

பதில்:- மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சட்டசபை உள்ளே நடந்த பிரச்சினையால் சட்டை கிழிந்தபோது, முதலில் ஓடி வந்தது கவர்னர் அலுவலகம் தான். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, வாரா வாரம் கவர்னரை பார்த்து ஊழல் புகார் கொடுத்தார்கள். இப்போது கவர்னரை பற்றி தி.மு.க.வினர் விமர்சனம் செய்வது வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story