தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடல் அட்டை சாகுபடி என்ற பெயரில் இந்தியாவை சீன உளவு பார்க்கத் தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும். இதை மத்திய அரசு நன்றாக அறியும். ஆனாலும் இந்த விஷயத்தில் அமைதி காப்பது ஏன்? எனத் தெரிய வில்லை.
இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சதித்திட்டங்களுக்கு இலங்கை அரசு தெரிந்தே உதவி செய்கிறது. ஒருபுறம் இந்தியாவிடம் உதவிகளை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு, இன்னொருபுறம் அதன் விசுவாசத்தை சீனாவுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையை தளமாக மாற்றிக் கொண்டு, தெற்கிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் சீனாவின் திட்டம் வெற்றி பெற்றால், அது இந்திய இறையாண்மைக்கு சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே, இலங்கை வழியாக சீனாவிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பது தான் இந்தியாவின் முதன்மை பணியாக இருக்க வேண்டும். அதற்காக தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண்ணை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
அதன் பிறகும் இலங்கை அரசு திருந்தாவிட்டால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.