திருக்கோவிலூர் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் செடல் திருவிழா
திருக்கோவிலூர் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்த பாவந்தூர் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் காவடி பூஜை மற்றும் செடல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசாி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். மேலும் செடல் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் மேட்டுக்குப்பம் பாவந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நேற்று விடையாற்றி நிகழ்ச்சியும், இடும்பன் பூஜையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.