நிலக்கடலை விற்பனை அமோகம்


நிலக்கடலை விற்பனை அமோகம்
x

ராமநாதபுரம் சந்தையில் நிலக்கடலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் சந்தையில் நிலக்கடலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

ஆர்வம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்திக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலை சாகுபடியில் அதிகஅளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. கடலை சாகுபடிக்கு ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களே சிறந்ததாகவும். அதிலும் டிசம்பர் ஜனவரி மாதங்களில்தான் அதிகஅளவில் மழை பெய்யா விட்டாலும் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைத்து 90 முதல் 95 நாட்களில் அறுவடை கிடைத்துவிடும். இதன்காரணமாக விவசாயிகள் மழையின்றி போனாலும் நெல்விவசாயம் கைவிட்டாலும் கடலை உள்ளிட்டவைகளை பயிரிட்டு வாழ்வாதாரத்தை பார்த்து கொள்கின்றனர்.

விற்பனை

இந்தநிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலை விதைப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. டிசம்பர் மாத இறுதியில்தான் பெரும்பாலும் தொடங்குவது வழக்கம். இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் நகரில் நடைபெற்ற சந்தையின்போது ஏராளமான வியாபாரிகள் நிலக்கடலையை குவியல் குவியலாக குவித்து விற்பனைக்கு வைத்திருந்தனர். இதுகுறித்து நிலக்கடலை வியாபாரியிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை. அறுவடைசெய்து விற்பனைக்கு கொண்டுவருவதற்கு ஓரிரு மாதங்களாகும்.

மதுரை நிலக்கடலை

இதனால் நாங்கள் வியாபாரத்திற்காக மதுரையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு ஆடிப்பட்டத்தில் விதைத்து அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலைகள் வந்துள்ளன.

அதனை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விற்பனை செய்வதால் இங்கு கூடுதல்விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு படி நிலக்கடலை தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்கிறோம். ராமநாதபுரம் மாவட்ட நிலக்கடலை வந்துவிட்டால் ரூ.40-க்கு கூட விற்பனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். விலை அதிகம் என்றாலும் நிலக்கடலையை மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story