அரியலூரில் விதைத்திருவிழா கண்காட்சி


அரியலூரில் விதைத்திருவிழா கண்காட்சி
x

அரியலூரில் விதைத்திருவிழா கண்காட்சி நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் மற்றும் தமிழ் களம் சார்பில் விதைத்திருவிழா கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெறுகிறது. இதனை அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் விவசாயிகள் நாட்டு விதைகளை விட்டுவிட்டு வீரிய ரக விதைகளை பயன்படுத்துவதால் மனிதன் மட்டுமல்லாமல் கால்நடைகள் உட்கொள்ளும் உணவிலும் பல்வேறு ரசாயனம், பூச்சி மருந்துகள் கலந்துள்ளதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு உயிரற்ற மண்ணாக மாறி வருகிறது. மனிதனும் மலடாகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் தெருவுக்கு தெரு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் உள்ளன. இதைத்தவிர்க்கும் வகையில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். விதைக்காக பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கண்காட்சியில் நாட்டு நெல் ரகங்களான நவரா, கல்லுருண்டை, பால்குடவாளை, மாப்பிள்ளை சம்பா என பல்வேறு பாரம்பரிய வகை நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரை வாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள், கடலை, உளுந்து, முந்திரி, நாட்டு பருத்தி விதைகள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டன. மேலும், இயற்கை சாகுபடிக்கான இடுபொருள்கள், இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. விதை திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி சென்றனர். மேலும் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. வாழை மற்றும் பலாப்பழங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. பஞ்சகாவியம், மீன் அமிலம் விறக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், சுருள்வாள் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.


Next Story