நெல்விதைகளை விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும்


நெல்விதைகளை விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
x

நாற்றங்காலில் நெல்விதைகளை விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்று வேளாண்மை விஞ்ஞானி கூறினார்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நாற்றங்காலில் நெல்விதைகளை விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்று வேளாண்மை விஞ்ஞானி கூறினார்.இது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும் இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம் மற்றும் மரபியல்) சூ. அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் விதைப்பு

தற்போது நெல் விதைப்பதற்கான குறுவை பருவம் தொடங்கி உள்ளது. இப்பருவம் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு முடிவடைகிறது. குறுவை பருவத்தில் குறுகிய கால நெல் ரகங்களான ஏ.எஸ்.டி. 21, கோ 55, ஏ.டி.டீ. 57, டி.ஆர்.ஒய். 5, கோ 54, ஏ.டி.டீ. 55, ஏ.டி.டீ. 53, எம்.டி.யு. 6, டீ.பி.எஸ். 5 மற்றும் கோ 51 ஆகிய ரகங்களை பயிரிடலாம்.ஒரு ஹெக்டருக்கு 60 கிலோ என்ற விகிதத்தில் விதை நெல்லை 20 சென்ட் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நெல் விதைகள் நன்கு திரட்சியாகவும், பதர் மற்றும் நோய் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும். விதையின் முளைப்புத்திறன் 98 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மகசூல் அதிகரிப்பு

நாற்றங்காலில் நெல் விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது ரசாயன பூஞ்சாண கொல்லிகள் அல்லது பூச்சிக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சாண கொல்லிகள்அல்லது பாக்டீரியாக்களைக் கொண்டு மேல் பூச்சு செய்வதாகும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் அதிகரித்து விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பயிர்களின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.

பூஞ்சாணக் கொல்லி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பன்டாசிம் என்ற பூஞ்சாண கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து விதையுடன் கலந்து 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு முளைப்பதற்காக 24 மணி நேரம் இருட்டில் சாக்கு பை கொண்டு மூடி வைத்து பின் விதைக்கலாம். உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்பவர்கள் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா அல்லது ஒரு கிலோ அசோபாஸ் உயிர் உரங்களை தேவையான தண்ணீரில் கரைத்து அதில் ஒரு எக்டேருக்கு தேவைப்படும் விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து பின் நாற்றங்காலில் விதைக்கலாம்.ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உயிர் உரங்களுடன் கலந்து விதை நேர்த்தி செய்யக் கூடாது. இவ்வாறு நல்ல முளைப்புத்திறன் உடைய விதைகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் விதை நேர்த்தி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க முடியும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story