2½ கிலோ தங்கத்துடன் படகை விட்டுவிட்டு தப்பிய கடத்தல்காரர்களை ேதடும் பணி தீவிரம்


2½ கிலோ தங்கத்துடன் படகை விட்டுவிட்டு தப்பிய கடத்தல்காரர்களை ேதடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுங்கத்துறையினரால் 2½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடும்பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

சுங்கத்துறையினரால் 2½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடும்பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தப்பினர்

இலங்கையிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி சுங்கத்துறையினர் தங்களுக்கு சொந்தமான அதிவேக ரோந்து படகில் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது மண்டபம் முயல் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த பைபர் படகை நிறுத்த முயன்றனர்.

ஆனால் சுங்கத்துறை படகை கண்டதும் அந்த படகில் இருந்த கடத்தல் காரர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக உச்சிப்புளி கடல் பகுதியை நோக்கி செலுத்தியுள்ளனர். பின்னர் சுங்கத்துறையினர் அந்த படகை துரத்தி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைபர் படகில் சென்ற கடத்தல் காரர்கள் படகை உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரையை ஒட்டிய பாறை மீது வேகமாக மோத செய்து நிறுத்திவிட்டு படகிலிருந்து தப்பி குதித்து கடற்கரையில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

தங்கக்கட்டிகள்

தொடர்ந்து நொச்சியூரணி கடற்கரையில் கடத்தல் காரர்களால் நிறுத்தப்பட்ட பைபர் படகை சோதனை செய்த சுங்கத்துறையினர் அதிலிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் காரர்களால் தங்க கட்டிகள் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்பதை மையப்படுத்தி கடந்த 3 நாட்களாக உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரையை ஒட்டிய பகுதி மற்றும் கடல் பகுதியிலும் சங்கு குளிக்கும் மீனவர்கள் மூலமும் தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை.

ரூ.1½ கோடி

இந்தநிலையில் கடத்தல்காரர்களால் பைபர் படகில் போட்டுச் செல்லப்பட்ட தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து சுங்கத்துறை இணை ஆணையர் ராமச்சந்திரன் முன்னிலையில் பிரித்து பார்க்கப்பட்டது. அப்போது அதில் 4 தங்க கட்டிகள் இருப்பதும், மொத்தம் 2½ கிலோ எடை என்பதும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

படகில் இருந்து தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் 2 பேர் பிடிபட்ட பின்னர் தான் இலங்கையில் இருந்து மொத்தம் அவர்கள் கடத்திக் கொண்டுவரப்பட்ட தங்க கட்டிகள் எவ்வளவு, இதில் கடலில் ஏதேனும் தங்கக் கட்டிகள் வீசப்பட்டுள்ளதா அவர்களிடம் ஏதேனும் தங்க கட்டிகள் உள்ளதா என்பது குறித்த முழு விவரமும் தெரியவரும் என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இலங்கையில் இருந்து மண்டபம் கடல் பகுதி வழியாக கடத்திக் கொண்டுவரப்பட்ட 34½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story