தடுப்பணையில் அருவி போல் வெளியேறும் நீர்க்கசிவு


தடுப்பணையில் அருவி போல் வெளியேறும் நீர்க்கசிவு
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:45 PM GMT)

தலக்குளத்தில் உள்ள வள்ளியாறு தடுப்பணையில் நீர் கசிவு அருவி போல் ஆர்ப்பரித்தபடி வெளியேறுகிறது. இதனை தடுக்க தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

தலக்குளத்தில் உள்ள வள்ளியாறு தடுப்பணையில் நீர் கசிவு அருவி போல் ஆர்ப்பரித்தபடி வெளியேறுகிறது. இதனை தடுக்க தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகுளம்

மணவாளக்குறிச்சி அருகே பெரியகுளம் ஏலா உள்ளது. இது சுமார் 700 ஏக்கர் பரப்புக்கொண்டது. இங்கு ஆண்டுதோறும் கன்னிப்பூ, கும்ப பூ சாகுபடி அமோகமாக நடந்து வருகிறது. தற்போது கன்னி பூ நடவு முடிந்து உள்ளது. இந்த ஏலாவுக்கு நீராதாரமாக விளங்குவது அருகில் உள்ள பெரியகுளம். இது அந்த பகுதியில் வற்றாத நீர் நிலையாக உள்ளது. இந்த குளம் 2.6 கி.மீ. நீளமும், 750 மீட்டர் அகலமும் கொண்டது.

இந்த குளத்திற்கு தலக்குளம் வள்ளியாற்றின் முகத்துவாரம் வழியாக தண்ணீர் பாய்கிறது. இதனால் இதில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் குன்னங்காடு பகுதி பெரியகுளம் மறுகால் ஓடை வழியாக வழிந்தோடும் தண்ணீர் சேரமங்கலம், படர்நிலம் வழியாக மணவாளக்குறிச்சி வள்ளியாற்றில் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரத்திற்கும், பேரூராட்சி ஆழ் துளை கிணறுகளுக்கும் குடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்தநிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் பெரியகுளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குன்னங்காடு மறுகால் ஓடை வற்றி உள்ளது. இந்த மறுகால் ஓடை வற்றியதால் சேரமங்கலம், படர்நிலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தென்னை, வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது.

தலக்குளம் வள்ளியாறு தடுப்பணை

கடந்த ஜூன் மாதம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் வில்லுக்குறி, மூலச்சல், பேயன்குழி மற்றும் இரணியல், தலக்குளம் வள்ளியாற்றின் முகத்துவாரம் வழியாக பெரிய குளத்திற்கு வருகிறது.

ஆனால் இந்த தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள கல்லால் ஆன தடுப்பணையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் மணவாளக்குறிச்சி வள்ளியாறு வழியாக கடியபட்டணம் கடலில் வீணாக கலக்கிறது. தலக்குளம் வள்ளியாறு ஷட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டபோது சீரான முறையில் மேற்கொள்ளாததால் கூடுதலாக தண்ணீர் வெளியேறி வீணாகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இது குறித்து பெரியகுளம் ஏலா விவசாயிகள் கூறியதாவது:-

பெரியகுளம் குன்னங்காடு மறுகால் ஓடை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறிய பாலம் அமைத்து சீரமைக்கப்பட்டது. ஆனால் சீராக சீரமைக்கப்படாததால் சேரமங்கலம், படர்நிலம் பகுதிக்கு மறுகால் நீர் செல்லவில்லை. இதனால் அங்கு நிலத்தடி நீராதாரம் குறைந்து உள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் தலக்குளம் வள்ளியாறு தடுப்பணை பழமையானது. ராட்சத கற்களான இந்த தடுப்பணையில் நீர் கசிவை தடுக்க வேண்டும். தவிர தலக்குளம் முகத்துவாரத்தின் தெற்கு தடுப்பணையின் உயரத்தை ஒரு அடி உயர்த்த வேண்டும். சீரமைக்கப்பட்டுள்ள ஷட்டர் பகுதி தடுப்பணையிலும் ஒரு அடி உயர்த்த வேண்டும். இவ்வாறு செய்தால் ஆண்டு முழுவதும் கடலில் வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை பெரியகுளத்தில் சேமித்து வைக்கலாம். எனவே தினமும் கடலில் வீணாக கலக்கும் நீரை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர் வள ஆதார அமைப்பும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story