பொதுமக்களுக்கு ரூ.10-க்கு 8 ரக காய்கறி விதை தொகுப்பு
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு ரூ. 10-க்கு 8 ரக விதைகள் அடங்கிய காய்கறித் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
மானியத்திட்டங்கள்
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
உடுமலை வட்டாரத்தில் 2022-23 நிதியாண்டில் ஆலாம்பாளையம், குருப்பநாயக்கனூர், சின்ன குமாரபாளையம், வடபூதனம், கணக்கம்பாளையம், கண்ணம நாயக்கனூர், சின்னவீரன்பட்டி, குறுஞ்சேரி, தீபாலப்பட்டி, முடக்குபட்டி, தின்னப்பட்டி, ஜெ.என்.பாளையம் ஆகிய 12 ஊராட்சிகளும், மடத்துக்குளம் வட்டாரத்தில் மை வாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய 4 ஊராட்சிகளும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் இந்த 16 கிராமங்களிலும் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காய்கறி விதைகள்
தற்போது விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் 8 விதமான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த காய்கறி தொகுப்பில் வீட்டுத்தோட்டங்களுக்கு தேவையான கீரை விதைகள், வெண்டை, முருங்கை, முள்ளங்கி, தக்காளி, கொத்தவரை, பொரியல் தட்டை, பாகல் ஆகிய 8 விதமான விதைகள் உள்ளன. இதன் மொத்த விலை ரூ.40 ஆகும். தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் 75 சதவீத மானியத்தில் ரூ.10-க்கு இந்த விதைத் தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்துக்கு 100 விதைத் தொகுப்பு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விதைத்தொகுப்புகள் வழங்கப்படும்.
ஒருவருக்கு ஒரு விதைத் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். எனவே மேற்கண்ட 16 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த விதைத் தொகுப்புகளைப் பெறுவதற்கு ஆதார் நகல் மட்டும் கொண்டு வந்தால் போதும். விதைத்தொகுப்புகள் தேவைப்படுபவர்கள் உடுமலை, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.