கிராவல் மண் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல்
கிராவல் மண் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி அருகே நாகுடியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் அள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன் அனுமதியை பெறுபவர்களின் சிலர் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதல் வாகனங்கள் மூலம் ஏரிகளில் இருந்து கிராவல் மண் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு கிராவல் மண் கடத்திய தர்மராஜன் வயல் கிராமத்தை சேர்ந்த சுதாகர், சிங்கவனம் கிராமத்தை சேர்ந்த முகமது யூசுப், ஜீவானந்தம், விளானூர் கிராமத்தை சேர்ந்த அம்ப்ரோஸ், காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மதிவாணன் உள்ளிட்ட 5 பேர் மீது நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகுடி அருகே அம்மன் ஜாக்கி ஏரி அருகே கிராவல் மண் கடத்தி வந்த கூகனூரை சேர்ந்த கண்ணன், பிராமணவயல் முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர். கிராவல் மண் கடத்திய 4 டிராக்டர்களை பறிமுதல் செய்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.