கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்- தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காரிமங்கலம்:
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கடத்தி வந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் தர்மபுரி அருகே உள்ள காரிமங்கலம் நகரம், அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
2 டன் பறிமுதல்
அப்போது கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் ஒரு சரக்கு வாகனத்தில் இருந்து மற்றொரு சரக்கு வாகனத்துக்கு சிலர் மூட்டைகளை மாற்றி வைத்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் சென்றனர். போலீசாரை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் மூட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இதையடுத்து போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 2 டன் அளவிலான புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புகையிலை பொருட்களை கடத்தி வந்து, தப்பி ஓடி தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.