தேனியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் மதுபான பாட்டில்கள் அழிப்பு


தேனியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  15 ஆயிரம் மதுபான பாட்டில்கள் அழிப்பு
x

தேனியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் மதுபான பாட்டில்கள் அழிக்கப்பட்டன

தேனி


தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை, மதுபானம் கடத்தல் போன்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதன்படி தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் தேனி தாலுகா அலுவலகத்திலும், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு இருந்தன.

கடந்த 1½ ஆண்டு கால கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் தொடர்பான வழக்குகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி அந்த மதுபான பாட்டில்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேனி ஆயுதப்படை பிரிவில் இருந்து சொக்கத்தேவன்பட்டி செல்லும் சாலையோரம் உள்ள கரட்டுப் பகுதிக்கு தேனி, உத்தமபாளையத்தில் இருந்து மதுபான பாட்டில்கள் இன்று எடுத்து வரப்பட்டன.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் இருந்த மதுபான பாட்டில்கள் அங்கு காலியிடத்தில் கொட்டப்பட்டன. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மதுபான பாட்டில்கள் மொத்தமாக உடைத்து அழிக்கப்பட்டன.

அப்போது பாட்டில்கள் உடைந்து வெளியேறிய மதுபானம் ஆறுபோல் ஓடியது. பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணால் அணை போட்டதால் குட்டைபோல் மதுபானம் தேங்கியது.

உடைக்கப்பட்ட மதுபான பாட்டில்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டன. குட்டை போல் தேங்கி நின்ற மதுபானம் மீதும் மண் கொட்டப்பட்டது. அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாபு, முருகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story