மணல் கடத்த பயன்படுத்திய ஒட்டகம் பறிமுதல்


மணல் கடத்த பயன்படுத்திய ஒட்டகம் பறிமுதல்
x

ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்து மணல் கடத்த பயன்படுத்திய ஒட்டகத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் ஒட்டகத்தை பராமரிக்க முடியாததால் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

சிவகங்கை

சிவகங்கை

ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்து மணல் கடத்த பயன்படுத்திய ஒட்டகத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் ஒட்டகத்தை பராமரிக்க முடியாததால் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

ஒட்டகத்தில் மணல் கடத்தல்

ஆற்று மணல் அள்ளி கடத்துவதற்கு போலீசாரே எதிர்பார்க்காத பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர்.

சிவகங்கையை அடுத்த மறவமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவர் நூதனமுறையில் ஒட்டகத்தின் மூலம் மணல் கடத்தி சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் மாட்டுவண்டியில் ஆற்று மணலை அள்ளி வந்தார். மணல் பரப்பான பகுதியில் நடக்க முடியாமல் மாடு திணறியது. இதை தொடர்ந்து அந்த நபர், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். அந்த ஒட்டகத்தை டயர் வண்டியை இழுக்க வைத்து, ஆற்று மணலை கடத்தி வந்துள்ளார்.

திரும்ப ஒப்படைத்தனர்

இந்த நிலையில் அந்த பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்ட போலீசார், ஒட்டகத்தை பயன்படுத்தி, அந்த நபர் மணல் அள்ளிவந்ததை பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஒட்டகத்துடன் வண்டியை கைப்பற்றி மறவமங்கலம் புறக்காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஒட்டகத்திற்கு உணவு அளித்து பராமரிக்க முடியாமல் திணறிய போலீசார், பறிமுதல் செய்த ஒட்டகத்தை மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. மறவமங்கலம் போலீஸ் நிலையத்தில் மணல் அள்ளி வந்த வண்டியுடன், ஒட்டகம் நிற்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story