கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
களியக்காவிளையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
வாகன சோதனை
குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று களியக்காவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மீன் லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து லாரி டிரைவர் சிதறால் பகுதியை சேர்ந்த ஜெபின்ராஜ் (வயது 28) என்பவரை போல்ீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 207 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அது 10 ஆயிரத்து 350 கிலோ ஆகும். அதாவது 10 டன் ரேஷன் அரிசி இருந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
அதைத் தொடர்ந்து லாரியுடன் சேர்த்து 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் ஜெபின்ராஜை கைது செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக லாரி உரிமையாளர் சுரேஷ், லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றி அனுப்பிய பரமகுடியை சேர்ந்த கருப்புராஜா ஆகியோர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.