போக்குவரத்து விதி மீறிய 14 வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து விதி மீறிய 14 வாகனங்கள் பறிமுதல், அனுமதி ரத்து செய்யவும் நடவடிக்கை.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருப்பத்தூர், வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேக்சி கேப் வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவன வாகனங்களில் கூடுதலாக நபர்களை ஏற்றிச் செல்வது, அனுமதிச் சீட்டு புதுப்பிக்காமலும், தகுதிச் சான்று புதுப்பிக்காமலும் ஓட்டுனர் உரிமம் பெறாமலும் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் மொத்தம் 22 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த ஏப்.1 முதல் மே 31-ஆம் தேதி வரை வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு 40 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இணக்க கட்டணமாக ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 100 மற்றும் வரியாக ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 418 வசூல் செய்யப்பட்டுள்ளது. 11 வாகனங்கள் வரி மற்றும் இணக்க கட்டணம் செலுத்தப்படாததால் விடுவிக்கப்படாமல் உள்ளது.
வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும் நிலையில் வாகனங்களின் அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்ப்பட்டுள்ளது.