3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகார்
கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டு உள்ளார். இந்தநிலையில் பேரூர் பகுதியில் இருந்து சிலர் சட்ட விரோதமாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்திற்கு புகார் சென்றது.
ரேஷன் அரிசி
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கோவை வடவள்ளி ரோடு பேரூர் மேம்பாலம் சந்திப்பில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் ரேஷன் அரிசி மொத்தம் 3 ஆயிரம் கிலோ இருந்தது தெரியவந்தது. இது குறித்த அந்த வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரித்தபோது, அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதை கடத்த முயன்ற பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் ராமசாமி(வயது 28), பாரம் தூக்கும் தொழிலாளி ஏசுராஜ்(49) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த முனீஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.