4 சாமி சிலைகள் பறிமுதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி


4 சாமி சிலைகள் பறிமுதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
x

கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைத்திருந்த 4 சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மவுனசாமிகள் மடத்தில் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு பழமையான உலோக சிலைகள் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த 23 செ.மீ உயரமும், 12.5 செ.மீ அகலமும் கொண்ட நடராஜர் சிலை, 14 செ.மீ உயரமும், 5 செ.மீ அகலமும் உடைய திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய சிவகாமி அம்மன் உலோகச்சிலை, 11 செ.மீ உயரமும், 8.5 செ.மீ அகலமும் கொண்ட திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய விநாயகர் சிலை, 37 செ.மீ உயரமும், 16 செ.மீ அகலமும் கொண்ட பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட உலோக சாமி சிலைகள் மற்றும் 144 செ.மீ உயரமும், 115 செ.மீ அகலமும் கொண்ட 63 நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நிர்வாகியிடம் விசாரணை

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் ஓவியத்தை கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.

இந்த உலோக சிலைகளின் விவரங்கள் குறித்து மவுன சாமிகள் மடத்தின் நிர்வாகி வைத்தியநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் வழி, வழியாக இருந்து வரும் சிலைகள் மற்றும் ஓவியத்தை பாதுகாக்கும் பணியில் தான் ஈடுபட்டு வருவதாகவும் வைத்தியநாதன் தெரிவித்தார்.

கோவிலுக்கு சொந்தமானதா?

அந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதா? என்ற விவரங்கள் புலன் விசாரணையின்போதுதான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story