700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

திண்டுக்கல் கடைகளில் விற்க வைத்திருந்த 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கடை, கடையாக சென்று அறிவுறுத்தினர்.

இதை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். திண்டுக்கல்-பழனி சாலை, தாலுகா அலுவலக சாலை, மவுன்ஸ்புரம், கோட்டைக்குளம் சாலை ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளில் சோதனை செய்தனர்.

700 கிலோ பறிமுதல்

அப்போது 4 மொத்த விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதேபோல் மொத்த விற்பனை கடைகளுக்கு உரிய 2 குடோன்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

இதையடுத்து கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்க வைத்திருந்த கடைக்காரர்களையும் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தப்பட்டன. மேலும் தினமும் நகர் முழுவதும் சோதனை நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story