கல்குவாரியில் இருந்து டெட்டனேட்டர்- ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் இருந்து டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பொம்மாடி மலை பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி செயல்படுவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல், சப்-இன்ஸ்பெக்டர் யோக ரெத்தினம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்த சென்றனர். அப்போது போலீசார் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
அப்போது அங்கு பாறைகளை உடைப்பதற்காக 32 டெட்டனேட்டர் குச்சிகள், 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் திரிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்தது. இதையடுத்து ஒரு பொக்லைன் வாகனம், ஜெனரேட்டர், 2 பம்பு செட் மோட்டார்கள் ஆகியவற்றையும், டெட்டனேட்டர்- ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி நடைபெற்றதாக தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.