கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சாத்தூரில் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூரில் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சாத்தூரில் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மீன்வளத்துறை ஆய்வாளர் சைலஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன்குமார், மீன்வள மேற்பார்வையாளர் ராமகவுண்டன் ஆகியோரின் தலைமையில் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சாத்தூர் நகரில் மெயின் ரோடு, பழைய படந்தால் ரோடு, தாயில்பட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்யப்படுகிறதா? குளிரூட்டப்பட்ட ெபட்டியில் வைத்து இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
இந்த ஆய்வின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன 40 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த மீன்களை விற்பனையாளர்கள் முன்னிலையில் கிருமி நாசினிகள் தெளித்து அதிகாரிகள் அழித்தனர். கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன மீன்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. அதனையும் மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.