நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
சிவகங்கை
அந்தமானில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேஸ்வரன் (வயது 22). இவர் அங்கு கார் மெக்கானிக்காக வேலை பார்த்தார். கடந்த 2007-ம் ஆண்டு ராமகிருஷ்ணன் தன் குடும்பத்துடன் மானாமதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது வெங்கடேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். திருப்புவனத்தை அடுத்த தூதை விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் இழப்பீடு கேட்டு சிவகங்கையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஸ்வரன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கும் படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லையாம். இதையடுத்து ராமகிருஷ்ணன் மீண்டும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் வக்கீல் ராமசாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யதாரா, இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சிவகங்கை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோவை செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story