முட்டைக்கோஸ் வேனில் மூட்டை, மூட்டையாக குட்கா பறிமுதல்


முட்டைக்கோஸ் வேனில் மூட்டை, மூட்டையாக குட்கா பறிமுதல்
x

வாணாபுரம் அருகே காய்கறி வாகனத்தில் முட்டைக்கோஸ் மூட்டைக்கு கீழே மூட்டை, மூட்டையாக பதுக்கி கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே காய்கறி வாகனத்தில் முட்டைக்கோஸ் மூட்டைக்கு கீழே மூட்டை, மூட்டையாக பதுக்கி கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

வாகன சோதனை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சவுந்தர்ராஜ், தனிப்பிரிவு போலீசார் குமார், ராமராஜ், மற்றும் போலீசார் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் முட்டைகோஸ்கள் இருந்தன. அந்த மூட்டைகளுக்கு கீழ் சந்தேகப்படும்படியான பொருட்கள் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்டைகோசை கீழே இறக்கியபோது அதன் கீழே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்

பின்னர் மினிவேனை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு டிரைவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஓலைபாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மோகன் (வயது 34) என்பதும், பெங்களூரு பகுதியில் இருந்து முட்டைகோஸ் ஏற்றிக்கொண்டு அதன் கீழ் பகுதியில் 30 மூட்டைகளில் குட்காவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

மேலும் குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து மோகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story