ரூ.1 கோடி ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
புதுவையில் இருந்து சென்னைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திய நாகையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வானூர்
போதைப்பொருள் கடத்தல்
புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானம், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுவையை அடுத்த சின்ன முதலியார்சாவடி சோதனைச்சாவடியில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது பையை சோதனை செய்தனர்.
ஹெராயின் போதைப்பொருள்
அப்போது அந்த பையில் ஹெராயின் என்னும் போதைப்பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகையை சேர்ந்த அலிதுல்லா (வயது 55) என்பதும், புதுவையில் இருந்து சென்னைக்கு போதைப்பொருளை கடத்தி சென்றது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த போதைப்பொருளை யாரிடம் வாங்கினார்? சென்னையில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றாரா? வேறு யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.