பேக்கரியில் முறையான தயாரிப்பு தேதி இல்லாத ரூ.15 ஆயிரம் உணவு பொருட்கள் பறிமுதல்


பேக்கரியில் முறையான தயாரிப்பு தேதி இல்லாத ரூ.15 ஆயிரம் உணவு பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் உள்ள பேக்கரியில் முறையான தயாரிப்பு தேதி இல்லாத ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் பறிமுதல் செய்தார்.

நாகப்பட்டினம்


நாகையில் உள்ள பேக்கரியில் முறையான தயாரிப்பு தேதி இல்லாத ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் பறிமுதல் செய்தார்.

திடீர் ஆய்வு

நாகையில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பேக்கரியில் தயாரிப்பு விவரம் முறையாக இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தயாரிப்பு விவரம் முழுமையாக இல்லாத உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் கூறும்போது:- தீபாவளியையொட்டி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும்.

உபயோகித்த எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடாது. உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை மேற்கொள்ளும் பகுதி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அனைத்து உணவு விற்பனையாளர்களும் உரிமம், பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

இந்த விதிமுறைகள் தவறும் பட்சத்தில் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அல்லது புட்சேப்டி ஆப் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்தாரர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story