மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

மகேந்திரவாடியில் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை உதவி கலெக்டர் பறிமுதல் செய்தார்.
பாணாவரம்,
பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் நேற்று உதவி கலெக்டர் பாத்திமா ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது மகேந்திரவாடியில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது. சப்-கலெக்டர் வருவதை கண்டவுடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். பின்னா் லாரியை சோதனை செய்தபோது அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து உதவி கலெக்டர் பாத்திமா நெமிலி தாசில்தார் பாலசந்தரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அப்போது நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், அசநெல்லிகுப்பம் கிராமநிர்வாக அலுவலர் சரவணன் ஆகியேர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து தாசில்தார் பாலசந்தர் டிப்பர் லாரியை போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.