திருச்செந்தூர் அருகே 48 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- அறையில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
திருச்செந்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 48 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 48 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் திருச்செந்தூர் ராமசாமிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியை சேர்ந்த உமாசங்கர் (வயது 40) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து உமாசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.47 ஆயிரத்து 700 மதிப்புள்ள 48 கிலோ எடையுள்ள 232 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக குணா என்ற குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.