விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே சாலைஅகரத்தில் இருந்து ராகவன்பேட்டை செல்லும் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட், பாக்கெட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை கைப்பற்றி எடை போட்டதில் 196 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த புகையிலை பொருட்களை விழுப்புரம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் பெங்களூருவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும், இதற்காக அவர் ரூ.1,500-க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை குடோனாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அப்பாசை போலீசார் தேடி வருகின்றனர்.