விபத்தை ஏற்படுத்திய காரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
விபத்தை ஏற்படுத்திய காரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த தென்தொரசலூரை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி மலர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்திலி பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரான சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 30) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் போலீசார் காரை பரிசோதித்தபோது அதில் 492 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரையும், அதில் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.