பள்ளி அருகே கடையில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்


பள்ளி அருகே கடையில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக விராலிமலையில் பள்ளி அருகே கடையில் விற்பனை செய்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

விற்பனை செய்யக்கூடாது

போதையால் பாதை மாறும் மாணவர்கள் என்ற தலைப்பில் நேற்று `தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அரசின் உத்தரவு இருக்கிறது. விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப் போகும் சூழல்கள் கொட்டிக் கிடக்கிறபோது இளைஞர்களை அது எளிதில் பற்றி கொள்கிறது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதன் தொடர்ச்சியாக நேற்று கொடும்பாளூர் சுகாதாரத்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான சுகாதார துறையினர் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் தெற்கு தெருவை சேர்ந்த பிரபு என்பவர் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சுகாதார துறையினர் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என கடை உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்தனர். இனிவரும் காலங்களில் இதே நிலை தொடர்ந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்து சென்றனர்.

பாராட்டு

சுகாதார துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு, செய்தி வெளியிட்டிருந்த தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story