சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு


சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு
x

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆனைமலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆனைமலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

சுத்திகரிப்பு நிலையம்

ஆனைமலை வழியாக ஆழியாறு, உப்பாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் மூலம் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆழியாறு மற்றும் உப்பாற்றில் கலக்கிறது. இதனால் நீர் மாசுபடுகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆனைமலையில் பேரூராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் பிரபாகரன், பேரூராட்சி தலைவர் கலைசெல்வி சாந்தலிங்க குமார், உதவி இயக்குனர் உமாராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

இடங்கள் தேர்வு

ஆனைமலை ஆழியாறு மற்றும் உப்பாற்றில் தினமும் சுமார் 14 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நீர் மாசுபடுவதை தடுக்க ஆனைமலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வெப்பரை ரோடு, மாசாணி அம்மன் கோவில் பகுதி, இந்திராநகர், மயான ரோடு, ஹக் லே-அவுட் உள்பட 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த இடங்கள் ஓடை புறம்போக்கில் வருவதால் நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டி உள்ளது. இந்த துறைகளிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று, திட்டம் தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து அரசிடம் இருந்து நிர்வாக ஒப்புதல் கிடைத்ததும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story